Thursday, June 17, 2010

தில்லையாளித் தல வரலாறு

ஸ்ரீ அபிராமி துணை
தில்லையாளித் தல வரலாறு
காப்பு – விக்கிரம விநாயகர்.
நல்ல செல்வமெய்ஞ் ஞானம் புகழ்தரும்
தில்லை யாளிச் சிவன்கதை தென்சொலால்
சொல்ல விக்கிரம சோழ விநாயகர்
வல்ல பாதம் வணங்கி வழுத்துவாம்.

சரணாகத ரட்சகர்
மாமேவு பரஞ்சோதி சச்சிதா னந்தநிரா மயமுல் லாசம்
தேமேவு வேதாந்தத் தெளிவுவியா பகன்கருணை திகழு மூர்த்தி
காமேவு திருத்தில்லை யாளியான் சார்ந்தாரைக் காத்த நாதன்
பூமேவு பாதமலர் போதமலர் புனைந்துதினம் புகழ்ந்து வாழ்வாம்.

பெரியநாயகியார்
மருமருவு மலர்க்கெடியை வேதமுன விளங்குசுடர் மணியை ஞானப்
பொருளுதவு செழுந்தருiவி புவனமெலாம் ஈன்றபசும் பூவை யாளை
அருணயன பூரணியை ஆரணியைத் திருத்தில்லை யாளி வாழ்வை
இரு நிலம்வா னகம்அயன்மால் புகழ்பெரிய நாயகியை இறைஞ்சி வாழ்வாம்.

சுப்பிரமணியர்
அஞ்சுதலை அமரருறாது அஞ்சுதலை யானரு மயிலோன் சூரன்
விஞ்சியெழு தலைநாலு தலையாகத தூதுரைத்த வீரன் முன்னோன்
தஞ்சமெனும் பத்தருக்கே ஆறுதலை யாயாறு தலைசேர் கோமான்
செஞ்சரண தாமரையை ஒருதலையாய்ப் பணிதலையே செய்குவோமே.

பூந்தருக்களும் மணமிக்க மலர்க்கொடிகளும் நிறைந்து விளங்குவதும்,
தவசிரேட்டர்களும் பத்தர்கள் குழாமும், சரியை முதலாகிய நால்வகை நெறிகளில்
நின்று சிவனடியே சிந்திக்கும் சிவஞானச் செல்வர்களும் நிறைந்து
பொலிவதுமாகிய நைமிசாரணியம் சன்னும் வனத்தில் பெருந்தவ முனிவர்கள் அம்பிகை
பாகனைக் குறித்து அருந்தவ வேள்வியைத் தொடங்கி முடித்துத் தூயராய்த்
துலங்கியிருக்குங்கால்.
வியாசர் மாணவராகிய சூத முனிவர் அங்கு எய்தினராக அங்கிரந்த தவசிரேட்டர்கள்
அவரை அன்புடன் எதிர்கொண்டழைத்து அர்க்கிய பாத்திய ஆசமனமுதலாகிய
உபசாரங்கள் செய்து ஆதனத்திருத்தி வழிபட்டு எந்தையே நும் திருவாய்மலர்
பொருந்துகின்ற சிவகதைகளுள் தலையாய தில்லைவன புராணத்தை யாமுய்யுமாறு
உரைத்தருள வேண்டுமென்று வேண்டினர். அதுகேட்ட சூதமுனிவர் சிவனருளைச்
சிந்தித்து மெய்சிலிர்த்து, ஆனந்தக் கண்ணீர் வார இருடிகளை நோக்கி
முனிவர்களே தில்லைவன பெருமையை ஆதிகாலத்தில் சிவபெருமான் சனற்குமார
முனிவருக்கும், அவர் என் குருவாகிய வியாசருக்கும், வியாச முனிவர்
எனக்கும் கூறினார். முன்வினை அனைத்தையும் மாற்றி, நினைத்தவை அனைத்தையும்
நல்கி, பிறவியை ஒழித்து முத்திப் பேற்றினையும் கொடுப்பதாகிய
இத்தில்லைவனப் புராணத்தைக் கேட்பீராக என்று அண்ணல் சூதமுனிவர் திருவாய்
மலர்ந்தருளினார்.
சூதமுனிவர் தில்லைவனச் சருக்கம், நரசிங்கச் சருக்கம், வீரபத்திரச்
சருக்கம், திருமால் பூசைச் சருக்கம், உமாதேவியார் பூசைச் சருக்கம்,
தீர்த்தச் சருக்கம், நிட்சளங்கன் பூசித்த சருக்கம் என்னும் சருக்கங்களால்
அத்தலப் பெருமையைச் சொல்லத் தொடங்கினார்.
1.தில்லை வனச் சருக்கம்:
மாதவத்தீர்! மேருமலையின்தென்பால் சம்புத்தீவில் பரத கண்டத்தில் ஸ்ரீ
சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் பொருட்டாக அருட்டிருமேனி
தாங்கித் திருக்கோயில் கொண்டெழுந்தருளியுள்ள திருத்தலங்களுள் சிதம்பரம்,
காசி, திருக்கடவூர், காஞசிபுரம், தென்தில்லைவனம், எனும் ஐந்து தலங்கள்
சிறந்ததாம். ஆவற்றுள் காவிரி நதியின் தெற்கிலும், கடலுக்கு மேற்கிலும்,
திருமறைக்காட்டுக்கு ஐந்து யோளனை தூரம் வடக்கிலும் அமைந்து விளங்கும்
தில்லைவனம் மிகச் சிறப்புடையதாகும்.
தூய மாதவர் திருந்திய உளமபோலும், தேசிகர் அருளும் தூயஞானமும் போலும்
நிலைபெற்று விளங்குவதாகிய ஸ்ரீ கயிலாய மலையில் வீற்றிருந்தருளும்
சிவபெருமான் உமாதேவியரோடு விளையாடல் ஆற்றியிருக்குங்கால், அப்பெருமானுடைய
அனுமதியில்லாமல் நந்தியம்பெருமான் ஆங்கு வந்த இந்திரனை உள்ளே செல்ல
விடுத்தார். இதனைக் கண்ட சிவபெருமான் ‘நம் அனுமதியின்றி நீ இங்கே
வந்தமையால் தென்திசைக் கண்ணுள்ள காவிரி நதியின் தென்பால் தில்லைவனமாகக்
கடவாய்’ என்று சபித்தார். இதனைக் னேட்ட இந்திரன் உளம் நடுங்கி இறைவனைப்
பலகாற் பணிந்து பிழை பொறுத்தருள வேண்டினான் சிவபெருமான் மனமிரங்கி நீ
தில்லைக்காடென்ன ஆங்கு உறைவாயாக சிலகாலம் சென்றபின் யாம் அங்கு வந்து
திருவருள் நடனம் செய்வோம். நீ தரிசனம் செய்வாய். உன்சாபம் அகலும்
என்றருளினார்.
அங்ஙனமே செவ்வியறியாது இந்திரனை இறைவன் திருமுன்னே செல்ல அனுமதித்த
குற்றத்தால் யாவரும் விரும்பும் கொள்ளிட நதியின் வடபால் தில்லைவனமாகெனச்
சபிக்கப் பெற்ற நந்திதேவர் அவ்வாறேயாக, அத்தலத்தில் எம்பெருமான் ஞான
அம்பலத்தில் ஆனந்த தாண்டவம் புரிந்து அவர் சாபத்தை அகற்றினார்.
இனி, பொன்னி நதியின் தென்கரையில் தில்லைமாவனமாய் இந்திரன் இருக்குங்கால்
அதனையே தென்தில்லை அம்பலமாகக் கொண்ட சிவபெருமான்.
“செஞ்சடை யாடப் பிறைநதியாடத் திருச்செவி மணிக்குழை யாடக்
கஞ்சவாண் முகத்தில் கவினிருந் தாடக் கருணைமுக் கண்ணினு மாட
அஞசன முகத்தின் பாசொலி யாட ஆரமா லிமையசைந் தாடக்
குஞ்சித பாதம் ஆடவானந்தக் கூத்தனார் ஆடினார் கூத்து”
இவ்வாறாக அம்பலக் கூத்தன் ஆடிய திருறடனத்தைத் தரிசித்த இந்திரன்
தன்சாபம் அகலப் பெற்று ஆனந்தக் கண்ணீர் சொரிந்து அகங்குழைந்து
மெய்யரும்பி அடிகள் பாதத்தில் பன்முறை வீழ்ந்து வணங்கிப் பலபடியாகப்
போற்றித் துதித்து வழிபட்டு எம்பெருமானே! தேவரீர் அடியேன் பொருட்டுத்
திருநடஞ்செய்து என் சாபத்தை ஒழித்த காரணத்தால் இத்தலம் இன்று முதல்
தில்லைவனம் எனப்பெயர் பெற்று விளங்க வேண்டும். இத்தலத்தைத்
தரிசிப்போரும், வதிவோரும், அறஞ்செய்வோரும் இம்மை மறுமை வீடு என்னும்
மும்மைப் பயனையும் பெற்று இன்பஎன்று பல வரங்களைப் பெற்றுக் கொண்டு
இறைவனிடம் விடைபெற்றுத் தன் பதவியை அடைந்தான்.
2.நரசிங்கச் சருக்கம்:
இரணியன் என்னும் அசுரன் தன்வர பலத்தால் மாதவர் வானவர் மானிடர் சித்தர்
யாவரும் அஞசும்படி எண்ணற்ற தீமைகள் செய்து இவ்வுலகை ஆட்சி புரிந்தான்.
வேறுகடவுளர் பெயர் சொல்லாமல் யாவரும் இரணியாய நம! என்று தன்னையே
தெய்வமாகக் கொண்டு வழிபட வேண்டுமென்று கட்டளையிட்டான். இவ்வாறாகக்
கொடுங்கோலாட்சி புரிந்துவரும் இரணியனுக்கு நத்தை வயிற்றில் முத்து
பிறப்பதைப் போல நன்மகனொருவன் தோன்றினான். புpரகலாதன் என்னும் அம்மகனுக்கு
ஐந்து வயது நிறைவுற்று கல்வி கற்கும் பருவத்தில் ஆசிரியன் முதன்முதலாகக்
கற்பித்தவாறு தந்தைப் பெயரைக் கூறமறுத்துத் திருமாலின் திருநாமத்தை
உச்சரித்ததைக் கண்ட ஆசிரியன் இரணியனுக்கு இதனை அறிவிக்க அவன் மிகவும்
சினங் கொண்டு நீ சொல்லும் நாராயணன் எங்கே உள்ளான்? ஏன வினவினான்.
பிரகலாதன் சிறிதும் தயக்கமிnறுi அச்சுதன் தூணிலும் இருப்பான்
துரும்பிலும் இருப்பான் அகரவுயிர் போல அண்ட சராசரங்கள் அனைத்திலும்
நிறைந்திருப்பான் என்று கூறியதைக் கேட்டு அங்கிருந்த தூணைக் காலால்
உதைத்து இத்தூணில் இருப்பதைக் காட்டென்று கூறிய அளவில் திருமால் அவன்
வரபலத்தைக் கருதி நரசிங்கவடிவமாய்த் தூணைப் பிளந்து கொண்டு வெளிப்பட்டு
இரணியனைத் தன்மடிமீதிருத்திக் கைநகத்தால் அவன் வயிற்றைக் கிழித்துக் கடல்
போலப் பெருகிய குருதியைக் குடித்து இரணியனை வதம் செய்தார். இந்நிலையில்
நரசிங்கவடிவம் கொண்ட நாராயணன் இரத்த வெறியால் செருக்குற்று உலகத்தை
அழிக்கத் தொடங்கியதைக் கண்ட தேவர்களும் முனிவர்களும் பிரம்மதேவனும்
மந்த்ர கிரியை அடைந்து ஸ்ரீ சிவபெருமானிடம் முறையிட எம்பெருமான்
நரசிங்கனைத் தொலைத்து யாவருக்கும் இதஞ் செய்யத் திருவுளம் பற்றினார்.
3.வீரபத்திரச் சருக்கம்:
நரசிங்கனை வதம் செய்யக் கருதிய சிவபெருமான் ஸ்ரீ வீரபத்திரக் கடவுளை
அழைத்து, நரசிங்கனை வதைத்து அவனுக்கு நல்லறிவு புகட்டி வருமாறு ஏவினார்.
வீரபத்திரர் தன் இரண்டாயிரம் திருக்கரங்களிலும் எண்ணற்ற ஆயுதங்களைத்
தாங்கிப் பெரும்படையோடு நரசிங்கனிடம் சென்று அவன் முன்நிலையை நினைவூட்டி
இன்னுரை பல பகர்ந்தும் கேளாதவனாய் வீரபத்திரரோடு போரிடத் தொடங்கினான்.
உடனே வீரபத்திரர் பேரொளி மயமாய் மேலே நான்கு கால்களும் கீழே நான்கு
கால்களும் பாதங்களும் உடையவராய் ஆயிரம் அலகுகளும், அண்டகோடிகளை அடக்கும்
இறக்கைகளும், கங்கைவேணியும், வெண்பிறையும், நீலகண்டமும், வச்சிர
நகங்களும், வலிய தந்தமும், அக்கினியைக் கக்கும் மூன்று திருவிழிகளும்,
பலபடைகள் தரித்த திருக்கரங்களும், பறவை, மிருகம், தேவர் முதலான பல
உருவங்களும் ஒன்று கூடிய சரப்புள் வடிவங்கொண்டு நரசிங்கனை அணுகி அவன்
வயிற்றைக் கிழித்து, மார்பைப் பிளந்து, தோலை உரித்தபின் அவன் உடம்பைத்
தன் வாலினைக் கொண்டு சுருட்டியெடுத்து வானத்தில் சுழற்றி அவன் முன்பு
சஞ்சரித்திருந்த தில்லைவனத்தில் வீசியெறிந்தார். இதனைக்கண்ட தேவர்கள்
நரசிங்கத்தை வென்ற சரபேசுவர மூர்த்தியைப் பலபடியாகத துதித்தார்கள்.
சரபேசுவரரால் வதஞ்செய்யப் பெற்ற நரசிங்கம் தன் உருவை விட்டு முன்னை
உருவெய்தி நல்லறிவு கைவரப்பெற்று சரப மூர்த்தியைப் பலபடியாகத் துதித்து
“மருவுபுக முருத்திரனே சருவராய் உலகமெலாம் வாங்குநாதா
கருதுமுக் கிரராகி அச்சம் விளைவிப்பவனே பவராய்ச்சங் கார ராகிப்
பெருகிவரு காலமாய்க் காலனுக்கும் காலனாம் பிரானே சூலத்
தருபடைசேர் கரவீர பத்திரனே சரணுனக்குச் சரணம் நானே”
“சூக்குமராய்ப் பசுபதியாய்ப் பராபரராய விசுவமொரு சொரூப ராகி
ஆக்குமகா தேவராய் ஒரு முதலாய் நீலகண்ட ராயுலோகம்
குhக்குமரி தனைச்சத்தி யாயுகந்தாய் நரமடங்கள் காய்ந்தாய் ஆய்ந்து
தாக்குவயி ரவசொருப சரபேச சரணுனக்குச் சரணம் நானே”
என 108 முறை போற்றி, எம்பெருமானே எனக்கெப்போது அஞ்ஞானம் தோன்றுமோ அந்த
வேளையெல்லாம் தேவரீர் எழுந்தருளி வந்து என்மனமயலை அகற்றி ஆள்வீராக என
வேண்ட சிவனருளால் வந்த மூர்த்தி மனமகிழ்ந்து தன் சரப வடிவை நீத்து
வீரபத்திர உருவமாயினார். இதனைக் கண்ணுற்ற பிரமன் முதலான தேவர்கள் ஸ்ரீ
வீரபத்திரக் கடவுளைத் துதித்தனர். அவர்கள் வேண்டிய வரங்களைக் கொடுத்து
இத்தில்லை வனத்தில் எம்மைப் பூசித்தவர் நினைத்தவை யெல்லாம் கை கூடப்
பெறுவர் என்று அருளி மறைந்தார் வீரபத்திரர். அன்று முதல் நரசிங்கத்தின்
தோலையும் முகத்தையும் முடிமாலையாகவும் நாயக மணியாகவும் அமைத்துக்
கொண்டார். சரபேசுவரரைத் தியானிப்பவர்கள் மந்திரசித்தி, சனன மரண துக்க
நீக்கம், பயநிவர்த்தி முதலான பல நன்மைகளும் பெறுவர். ஆதிக ரகசியமான
சரபகதையை அட்டமி சதுர்த்தசி நாட்களில் வாசிப்போர் சிவனருள் பெறுவர்.
துட்ட மிருகங்களாலும், நோயாலும் துன்புறார். முழை பெய்யாக் காலத்தில்
இக்கதையை வாசிப்பின் மழை பொழியும். சகலபொருள்களும் கைகூடும்.
4. திருமால் அருச்சனைச் சருக்கம்:
ஸ்ரீ வீரபத்திரக் கடவுளால் பங்கமடைந்த திருமால் சிவபெருமானை இகழ்ந்த
பிழைக்கும், தேவர்கள் எல்லோரும் காண அவமானம் பட்ட குறைக்கும் மிகவும்
மனமிரங்கி, பொறுத்தற்கரிய பிழைபொறுக்கும் சிவபெருமானைப் பூசித்து
உமாதேவியாரைப் போல கண்ணுதலோன் ஒருபாகத்திற் பொருந்துமாறு உதவப் பெறும்
பெருமை பெறுவேனாயின் எந்நாளும் மறக்க இயலாத சிவசிந்தனை உடையவனாவேன்
எனக்கருதி விசுவகர்மாவை அழைத்து இத்தில்லை வனத்தில் ஸ்ரீ சிவபெருமான்
எழுந்தருளியிருக்கத் தக்கதாக ஓராலயத்தை அமைத்துத் தருக என்று கூற,
விசுவகர்மன் மனமகிழ்வுடன் சுற்றாலயம் கோபுரம், சோபானம், மண்டபம்,
கருப்பக் கிரகம் முதலியவற்றுடன் சிறந்ததோர் ஆலயம் அமைத்துக் கொடுத்தான்.
திருமால் மகிழ்ச்சியுற்று ஆலயத்தின் கீழ்பால் சக்கராயுதத்தால் ஒரு வாவியை
அகழ்ந்து தீர்த்தமானத்தையும் அதில் நிலவுமாறு அமைத்து சிவபூசைக்குரிய
திருநந்தவனம் முதலியனவும் நிறுவி முறைப்படி சக்கர தீர்த்தத்தில் நீராடி
நித்திய கர்மானுட்டானங்களை முடித்துச் சிவபூசா திரவியங்களையும் நறுமலர்ஈ
தூபும், தீபம், நறுஞ்சாந்தம் நிவேதனம் ஆகியவற்றையும் குறைவின்றிக் கொண்டு
சிவாகம விதிப்படி நாடோறும் நியதியாகச் சிவபூசை செய்து திருவைந்தெழுத்தோதி
வழிபடலானார் திருமால் பூசைக்கு மனமகிழ்ந்த சிவபெருமான் உமாதேவியாரோடும்
அவர்முன் காட்சியளித்து வேண்டிய வரம் யாதென்றுவினவத் திருமால்
மனமகிழ்ந்து வாய்புதைத்துப் பணிந்து பெருமானே தேவரீரது பெருங்கருணையால்
தேவர்கள் யாவர்க்கும் மேலாம் பெருமை பெற்றேன். தேவரீரை எந்நாளும்
சிந்தித்துப் பேறு பெறும் வண்ணம் உமது திருமேனியின் வலப்பால் அடியேன்
பொருந்துமாறு வரமருள வேண்டும். தேவரீர் எந்நாளும் இவ்விலிங்கத்தில்
மகிழ்ச்சியுடன் எழுந்தருளி உறைதல் வேண்டும். சுக்கரதீர்த்தத்தில் மூழ்கி
தேவரீரை வழிபடுவோர் அறமுதலாகிய நால்வகைப் பயனையும் பெறவேண்டும்.
வலிமையுடைய யாளிமுகம் பெற்ற நரசிங்கத்தை வதைத்த காரணத்தால் இத்தலம்
யாளிபுரி (தில்லையாளி) என வழங்கப் பெறுதல் வேண்டும் என்று
பிராhத்தித்தார். இறைவன் அவர்கேட்ட வரமனைத்தையும் உதவி, அக்கணமே
திருமாலைத் தனது வலப்பாகத் திருத்தி அரியர்த்தேசுரராகக் காட்சியளித்தார்.
வெள்ளிமலையும் பச்சைமலையும், வெண்முகிலும் கருமுகிலும், திருப்பாற்கடலும்
கருங்கடலும் உள்ளம் விரும்பி ஓரிடத்திருந்தாற் போலச் சிவனும் திருமாலும்
பொறுத்தவிருந்த காட்சி பொலிவுடையதாயிற்று. அரியர்த்தேசுவரரைத் தரிசித்த
தேவர்களுக்கு வரம்பல ஈந்து, தில்லைச் சிற்றம்பலத்தைப் போல இத்தலத்தில்
எந்நாளும் எழுந்தருளியிருந்து அருள்பாலிப்போம் என்று அருளிச் சிவலிங்க
உருவில் இரண்டறக் கலந்தருளினார்.
5. தேவிபூசைச் சருக்கம்:
எல்லாத் தருமமும், செல்வம் வளனும், சிறந்த இன்பமும் விளைவதற்கேதுவாகிய
தில்லை மாவனத்தில் திருமால் செய்த கோயிலில் சிவபெருமான்
வீற்றிருந்தருளித் திருவருள் பாலித்து வருவதறிந்த பார்வதி தேவியார் இங்கு
வருதலை விரும்பிச் சேடியர்க்கறிவித்து இறைவனிடம் விடைபெற்றுத்
தென்தில்லைவனம் செல்லுவதற்கேற்ற பொன்மயமான விமானத்தில் சேடியர் புடைசூழப்
புறப்பட்டுக் காசி, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவண்ணாமலை,
சிதம்பரம், திருக்கடவூர் முதலான தலங்களைத் தரிசித்துத் தில்லை வனத்தை
அடைந்தார். தில்லை வனத்தில் திருமால் செய்த திருக்Nகுhயிலில் எனிவந்த
வான்கருணைப் பிரானாக, அரியர்த்தேசுவரனாக அருளொளி பரப்பி எம்பெருமான்
எழுந்தருளிருத்தலைத் தரிசித்துப் பேரானந்தமடைந்து நின்றாள்.
“ விண்ணு ளோர்களும் வியன்திசை யோர்களும் விரிநீர்
மண்ணு ளோர்களும் மாபிலாத்தோர்களும் வதனக்
கண்ணி னேருறக் கண்டதி சயிக்கவும் கருணை
அண்ணல் அம்மைமுன் தோன்றினான் பதம்பணிந் தமலை”

“ வேண்டு கல்வியும் செல்வமும் நிதியமும் விரகும்
பூண்ட ரூபமும் சாதியும் ஆயிளும் பெற்பும்
நீண்ட நீதியும் பரசிவன் காட்சியும் நிலவ
ஆண்ட நாயகன் பூசைதந் தருளுமென் றறிந்தாள்”

உமாதேவியார் சேடியரை வினித்துச் சிவபூசைக் குரிய திரவியங்களனைத்தையும்
தருவித்துச் சக்கரதீர்த்தத்தில் நீராடிப் புத்தாடை உடுத்துச்
சிவசின்னங்களணிந்து பூசைசெய்யத் தொடங்கிச் சிவாகம விதிப்படி நெய், பால்,
தயிர், தேன், ஆனைந்து கனி வர்க்கங்கள், ஐந்தமுது, இளநீர்,
ஆரஞ்செஞ்சாந்து, தண்பனிநீர் முதலான திரவியங்களால் அபிடேகங்கள் செய்து
ஒற்றாடைச் சாத்தி, ஆடை அணிகலங்களணிவித்து மலர்மாலைகள் சூட்டித் திருவமுது
ஊட்டிச் சுகந்த வில்வார்ச்சனை செய்து தூப, தீப முதலிய சோடசோப சாரங்களை
மந்திர முறையாற் செய்து திருவைந்தெழுத்தை ஓதி ஆனந்தம் மேலிட்டால்
அகங்குழைத்து மெய்யரும்பி அடிகள் பாதங்கையினால் தொழுது மெய்மறந்து
நின்றார்.
அம்மையார் ஆற்றிய பூசைக்குகந்த பெருமுhனார் அவர்முன் அருடுகாட்சியளித்து
நீ வேண்டிய வரங்களைக் கேட்பாயாக என்று திருவாய் மலர்ந்தருளினார்.
உமாதேவியார் எம்பெருமானைப் பணிந்து வணங்கி, தேவரீர் எந்நாளும்
இத்தலத்தில் வந்து வழிபடுவோர்க்கு வேண்டிய யோக பாக்கியங்களையும் முத்திப்
பேற்றையும் தந்தருள வேண்டும். தேவரீரது பெருங்கருணையால் அடியேன்
இத்தலத்தில் எல்லா அறங்களும் தழைத்து ஓங்கச் செய்யுமாறு வரந்தர வேண்டும்.
திருமணமாகாதவர்களும், புத்திரப் பேறு வேண்டினாலும், நோய், வறுமை முதலான
வற்கடத்தால் நலிவெய்துவோரும், இத்தலத்தை தரிசித்து வழிபட்ட அளவில்
அவர்கள் மனக்குறையை நீக்கி நல்லருள் பாலிக்கத் திருவுளம் பற்ற வேண்டும்
என்றின்ன வாகிய பல வரங்களை வேண்டினார். இறைவன் அம்மையார் கேட்ட
வரமனைத்தையும் உதவி இத்தலத்தில் பெரியநாயகி என்ற திருப்பெயருடன் எம்முடன்
சமவாயமாக எழுந்தருளியிருந்து அன்பர்குறை தீர்க்கும் அருந்துணையாய்
விளங்கிவருவாயாக. ஏன்று மனமகிழ்ந்தருளிச் செய்தார்.
இத்தலத்தின் மகிமையை உணர்ந்த நிஷ்களங்கன் என்னும் மன்னன் இத்தலத்தை
வந்தடைந்து சக்கர தீர்த்தத்தில் மூழ்கிச் சிவபெருமானுக்கும் பெரியநாயகி
அம்மையாருக்கும் சிறப்பு வழிபாடாற்றி நித்திய நைமித்திக விழாக்களைக்
குறைவின்றி நடைபெறச் செய்து நாடாளும் நற்பேறும் நோய் நீக்கமும் நன்மக்கட்
பேறும் பெற்று இன்புற்றான் என்று சூதமுனிவர் நைமிசவன முனிவர்கட்கு
எடுத்தியம்பிச் சிவனருளில் திளைக்கலானார்.

Saturday, June 05, 2010

தில்லையாளி என்கிற தில்லையாடி ஆலய தல வரலாறு


நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, பொறையாறுக்கு அருகில் உள்ள ஊர் தில்லையாளி என்கிற தில்லையாடி. இவ்வூர் தொன்றுதொட்டு சரித்திரத்தில் பெயர்பெற்று வருகின்றது. 1914-ல் காந்தியடிகள் தில்லையாடிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஊரில் ஸ்ரீ சார்ந்தாரைக் காத்த சுவாமி ஆலயம் உள்ளது.
சோழ மன்னன் இளங்கார முனிவர் என்ற அமைச்சரை திருக்கடவூருக்கு அனுப்பி அங்கு தங்கி ஆலயத்தை புதுப்பிக்கும்படி திருப்பணிக்கு உத்தரவிட்டு பொருட்களையும் வழங்கி வந்தான். மன்னனின் அனுமதி பெறாமல் திருக்கடவூருக்கு அருகில் உள்ள தில்லையாடி ஆலயத்தையும் ஒரே சமயம் திருப்பணி செய்துவிட்டான். இதை அறிந்த மன்னன் தன் கருத்துணராது செயல்பட்ட அமைச்சரின் கால், கைகளை சேதம் செய்க என ஆணையிட்டான். ஏவலர்களும் அவ்வண்ணமே செய்தனர். சிவபெருமான் முன்தோன்றி அசரீரியாக அமைச்சர் செய்த சிவாலய பணியை ஏற்றோம் என்றது கேட்ட அரசன் திடுக்கிட்டான். துன் குற்றத்தினையுணர்ந்து அமைச்சரிடம் அடிபணிந்தான். வெட்டுண்ட அமைச்சரின் கை கால்கள் ஒன்று கூடின. இளங்கார முனிவர் என்ற அமைச்சரை இவ்வாலயத்தில் தங்க வைத்து விட்டு அவருக்கு வேண்டிய அனைத்தும் செய்து கொடுத்துவிட்டு அரசன் சென்றுவிட்டான். சிவனருள் நிரம்பப் பெற்றவரான இளங்கார முனிவர் சிதம்பரம் பொற்சபையில் ஸ்ரீ நடராஜர் திருநடனம் செய்வதை இத்தலத்திலும் காண எண்ணங்கொண்டார். சிற்சபா நாதனும் வேண்டுவார் வேண்டுவதே ஈவான்கண்டாய் என்ற திருவாக்கின்படி இளங்கரை முனிவர் விரும்பிய வண்ணம் தில்லைவனத்தில் ஸ்ரீ நடராஜர் நடனமாடினார். ஆன்று முதல் இத்தலம் தில்லையாடி என வழங்கலாயிற்று. அன்று முதல் இறைவனுக்கு ஸ்ரீ சார்ந்தாரைக் காத்த நாதர் என்ற பெயர் வழங்கலாயிற்று.
இவ்வாலயம் திருக்கடையூர் ஆலயம் போன்ற அமைப்புள்ளதாயினும் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கோவில் , , மற்றும் ஊர் வாழ்மக்கள் முயற்சியாலும், தருமபுர ஆதீனகர்த்தர் நல்லாசியுடனும், காஞசி காமகோடி ஜகத்குரு ஜெயேந்திர மற்றும் விஜயேந்திர சுவாமிகளின் பரிபூரண ஸ்ரீமுகம் பெற்று 1995 செப்டம்பரில் பாலாலயம் செய்யப்பட்டு 2 ஆண்டுகளில் சுமார் 10 லட்ச ரூபாய் திருப்பணி வேலை முடிவுற்று அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சார்ந்தாரைக் காத்த சுவாமி (சரணாகத ரட்சகர்) ஆலயம் புத்தம்புதுப் பொலிவுடன் குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது..
.
இவ்வாலயத்தில் சிறப்பு அம்சம் திருநள்ளாறுக்கு ஒப்பான சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. (இங்கு வேறு எந்த நவகிரகங்களுக்கும் சன்னதி கிடையாது.)
ஆடி மாத விசேஷ நாட்களைத் தவிர ஆடிப்பூர விழாவில் பெரியநாயகி அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி குழந்தை இல்லா பெண்களுக்கும் வளைகாப்பு வைபவம் செய்து வைக்கப்படுகிறது. இதன் மூலம் தாய்மையுற்ற பெண்கள் ஏராளமாவர்.
இத்திருக்கோவிலுக்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 5டன் எடையுள்ள 2 பேர்களுக்கு மேல் நின்று இழுத்து அடிக்கக் கூடிய ராட்சத ஆலயமணியை வழங்கியுள்ளனர்.
.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் அபிராமி சன்னதிக்கு வரும் மெய்யன்பர்கள் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இத்திருக்கோவிலுக்கும் வந்து அன்னையின் அருட்கடாட்சத்தையும் ஈஸ்வரனின் அருளைப் பெறவும் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி: 09790626314