நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் நமது வாழ்வின் குறிப்பிட்ட விஷயங்களை நிர்ணயம் செய்யும் சக்திபடைத்தவை!
நமது துணிச்சல்,வாங்கும் நிலம் மற்றும் வீடு,ரத்தத்தில் இருக்கும் ஆரோக்கியம் போன்றவைகளுக்கு செவ்வாய் பகவான் பொறுப்பு!!
நாம் எப்படி சிந்திக்கிறோம் என்பதற்கும்,நமது அம்மாவுக்கும் நமக்குமான இணக்கமான சூழ்நிலையை உருவாக்குவது சந்திரன் பொறுப்பு!!!
நமக்கு அரசுப்பணி கிடைக்குமா? நமது அப்பாவுக்கும் நமக்குமான உறவு எப்படிப்பட்டது என்பதைத் தீர்மானிப்பது சூரியபகவானின் பொறுப்பு!!
நமது நகைச்சுவைக் குணம்,எழுத்தாற்றல்,நரம்பு மண்டலம்,காதலில் நமது சாமர்த்தியம்,நமது புத்தியை சிந்திக்க வைப்பது போன்றவைகள் புதனின் பொறுப்பில் வருகின்றன
;நமது இந்த ஜன்மத்தையும்,அடுத்த ஜன்மத்தையும்,நாம் அனுபவிக்கும் சுகங்கள்,சுக போகங்கள்,யோகங்கள்,நமது மனம் மற்றும் உடல் சார்ந்த கவர்ச்சிகளுக்கு சுக்கிரனே பொறுப்பாகிறார்;
நமது ஒழுக்கம்,நாம் கற்கவிரும்பும் சரசக்கலை,மாந்திரீகத்தால் நாம் பாதிக்கப்படுவோமா? அல்லது நாம் பிறரை மாந்திரீகத்தால் பாதிக்க வைப்போமா? என்பதைப் பற்றியும், நமது புலனாய்வுத்திறன்,நமது அப்பாவின் முன்னோர்கள் பற்றிய அறிய நமது பிறந்த ஜாதகத்தில் ராகுவின் இருப்பிடத்தைக் கொண்டு அறியலாம்;
நமக்கு இந்தப் பிறவியில் கிடைக்க இருக்கும் ஞானம்,தியான முயற்சிகள்,ஆன்மீக முயற்சிகள் பற்றி அறிய நமது பிறந்த ஜாதகத்தில் கேதுவின் அமைவிடத்தைக் கொண்டே புரிந்து கொள்ளமுடியும்
.நமது ஆயுள் மற்றும் நாம் செய்ய இருக்கும்,செய்து வரும் வேலை அல்லது தொழிலை நிர்ணயம் செய்வது சனிபகவானே!!!
இந்த ஒன்பது கிரகங்களும் சுயமாக நமது தலைவிதியை நிர்ணம் செய்வதில்லை;
நமது கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த நற்செயல்கள்,தீயச் செயல்களின் தொகுப்பைப் பொறுத்தே,நமது இந்தப் பிறவியில் இணைந்தும்,பிரிந்தும் நமது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் ஒவ்வொரு விநாடியையும் நிர்ணயம் செய்கின்றன.
இந்த நவக்கிரகங்களையும் ஸ்ரீகால பைரவப்பெருமான் தனது சுவாசத்தால் செயல்பட வைக்கிறார்;
ஆமாம்! ஸ்ரீகால பைரவப் பெருமானின் சுவாசமே பஞ்சாங்கமாக விரிவடைகிறது;
பஞ்சாங்கம் நவக்கிரகங்களின் சுழற்சியின் அடிப்படையில் உருவாகிறது;இந்த சூழ்நிலையில்,நாம் செய்த தவறுகளுக்குப் பிராயச் சித்தமே கிடையாது என்று இருந்தால்,உலக இயக்கத்தில் சுவாரசியமே இல்லாமல் போய்விடும்;
மனிதனாகப் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் திருந்தவும்,மனம் வருந்தவும் இறைவழிபாடு தோன்றியது.
அதில் மிக எளிய அதே சமயம் மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடு ஸ்ரீகாலபைரவப் பெருமான் வழிபாடு ஆகும்.
ஓரிரு முறைகள் ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபட்டதுமே நமது மனப்பூர்வமான வேண்டுதல்களை ஏற்றுக் கொண்டு நமக்கு முழுப் பாதுகாப்பு அருள்பவர் ஸ்ரீகால பைரவப் பெருமான் ஆவார்.
அனுபவத்தில் ஏராளமான ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் தமது ஸ்ரீபைரவப் பெருமான் வழிபாட்டின் மூலமாக இதை உணர்ந்திருக்கிறார்கள்.சனிபகவானின் வாதநோயை நீக்கியவர் ஸ்ரீகால பைரவப்பெருமான் ஆவார்.
சனிபகவானின் குருவாக ஸ்ரீகால பைரவப்பெருமான் இருக்கிறார்.சனிபகவானுக்கு நவக்கிரகப் பதவியைத் தந்தவரே ஸ்ரீகால பைரவப் பெருமானே! எனவே,யார் தொடர்ந்து ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபட்டு வருகிறார்களோ,அவர்களுக்கு சனிபகவானின் தாக்கம் சிறிதும் இராது;
மேலும்,தனது குருவான ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபடுவதால்,சனிபகவான் தனது உக்கிரத்தை பெருமளவு குறைத்து நிம்மதியாக வாழ்க்கைப் பயணத்தைத் தொடரச் செய்வார்.இது பல யுகங்களாகத் தொடரும் உண்மை ஆகும்.
சனியின் தாக்கம் தீர நிஜமான பரிகாரம் ஸ்ரீகால பைரவப்பெருமான் வழிபாடு மட்டுமே!விரையச்சனி இருப்பவர்கள்
16.12.2014. முதல் (தனுசுராசியினர்):தினமும் ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபட வேண்டும்;ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை அவரது சன்னதியின் முன்பாக நின்றவாறு சுமாராக பத்துநிமிடம் வரை ஜபிக்க வேண்டும்;சனிக்கிழமை தோறும் காலை 9 மணி முதல் 10.30க்குள் ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு தேங்காயில் நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.இந்த நேரம் முழுவதும் மேற்கூறிய மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு கால நேரத்தில் ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு அத்தர்,புனுகு,சந்தனாதித்தைலம்,செவ்வரளிமாலை,பால்,ஜவ்வாது போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்து வர வேண்டும்.அல்லது அபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும்.மேலே கூறிய மந்திரத்தை ஜபிக்கலாம்;இதன் மூலமாக விரையச்சனியின் தாக்கம் தீரும்.ஸ்ரீகால பைரவப் பெருமானின் அருள் கிட்டும்.
ஜென்மச்சனி இருப்பவர்கள்
16.12.2014 முதல்(விருச்சிகராசி)தினமும் ஸ்ரீகால பைரவப்பெருமானை வழிபட வேண்டும்.அப்போது அவர் சன்னதியின் முன்பாக நின்றவாறு ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை சுமார் பத்துநிமிடம் ஜபிக்க வேண்டும்.மேலும்,எலுமிச்சை பழத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்;ஒவ்வொரு சனிக்கிழமையும் வரும் ராகு கால நேரமான காலை 9 மணி முதல் 10.30 வரையிலான காலத்தில் வீட்டில் அல்லது ஸ்ரீகாலபைரவப் பெருமான் சன்னதியின் முன்பாக மேலே கூறிய மந்திரத்தை ஜபிக்கலாம்;எழுதலாம்;(பெண்கள் அந்த நாட்களில் மட்டும் எழுத/ஜபிக்கக் கூடாது)மண் அகல்விளக்கில் கறுப்பு வண்ணம் பூச வேண்டும்;அதில் பாதி நெய்,பாதி இலுப்பை எண்ணெய் கலந்து அத்துடன் ஒரு சொட்டு எலுமிச்சை சாறு கலந்து விளக்கேற்றி வழிபட வேண்டும்.ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாளிலும் வரும் ராகு காலத்தில் அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,பால்,செவ்வரளிமாலை போன்றவைகளைக் கொண்டு ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு அபிசேகம் செய்ய வேண்டும்.அபிஷேகத்தின் முடிவில் நமது பெயருக்கும்,நமது குடும்பத்தார் பெயருக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும்.அல்லது அபிசேகம் நடைபெறும் ஸ்ரீகால பைரவப் பெருமான் சன்னதியில் நின்றவாறு/அமர்ந்தவாறு ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
வாக்குச்சனி இருப்பவர்கள் 16.12.2014 முதல்(துலாம் ராசியினர்):தினமும் ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபட வேண்டும்.அப்போது அவர் சன்னதியின் முன்பாக நின்றவாறு(நிற்க முடியாதவர்கள் அமர்ந்து கொள்ளலாம்;அவருக்கு நேராக அமரக்கூடாது)ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று ஜபிக்க வேண்டும்.ஒவ்வொரு சனிக்கிழமையும் வரும் ராகு காலமான காலை 9 மணி முதல் 10.30க்குள் சாம்பல்பூசணியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு கால நேரத்தில் ஜவ்வாது,அத்தர்,புனுகு,சந்தனாதித்தைலம்,செவ்வரளிமாலை,பால் போன்றவைகளுடன் ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்;அல்லது அபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும்.அபிஷேகம் நடைபெறும் போது ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
அஷ்டமச்சனி இருப்பவர்கள் 16.12.2014 முதல் (மேஷராசி)
தினமும் ஸ்ரீகாலபைரவப் பெருமானை வழிபட வேண்டும்;அப்போது குறைந்தது பத்து நிமிடங்கள் வரையிலாவது ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 7.30 முதல் 9.30 க்குள் புனுகு பூச வேண்டும்.இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்;படையலாக கறிவேப்பிலைச் சாதம் ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு வைக்க வேண்டும்;அர்ச்சனை செய்தப்பின்னர்,அங்கே வருபவர்களுக்கு பகிர்ந்து தர வேண்டும்;நாமும் அதை உண்ணலாம்;ஒவ்வொரு மாதந்திர சனிக்கிழமை தோறும் ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு கறுப்புப் பட்டு சாத்த வேண்டும்;ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியும் வரும் ராகு காலத்தில் ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.அல்லது அபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும்.அபிஷேகத்துக்கு அத்தர்,புனுகு,ஜவ்வாது,செவ்வரளி,சந்தனாதித்தைலம்,பால் போன்றவைகளை வாங்கித் தர வேண்டும்.
கண்டச்சனி இருப்பவர்கள் 16.12.2014 முதல் (ரிஷப ராசியினர்);தினமும் ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபட வேண்டும்.அவரது சன்னதியின் முன்பாக சுமார் பத்து நிமிடம் வரையிலும் ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று ஜபிக்க வேண்டும்.கண்டச்சனியின் தாக்கம் தீர,திங்கட்கிழமை காலை 7.30 முதல் 9 மணிக்குள் ஸ்ரீகால பைரவப்பெருமானுக்கு அல்லிமலர் மாலை அணிவிக்க வேண்டும்;புனுகு பூச வேண்டும்;சாம்பற்பூசணியில் விளக்கேற்ற வேண்டும்;பாகற்காய் சாதம் படையலிட வேண்டும்;நமது பெயருக்கும்,நமது குடும்பத்தார் பெயருக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும்.ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு காலத்தில் ஸ்ரீகால் பைரவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்; அல்லது அதில் கலந்து கொள்ள வேண்டும்.அந்த நேரத்தில் மேலே கூறிய மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.அபிஷேகத்திற்கு புனுகு,ஜவ்வாது,அத்தர்,சந்தனாதித்தைலம்,செவ்வரளி,பால் போன்றவைகளைத் தர வேண்டும்.
அர்த்தாஷ்டமச்சனி இருப்பவர்கள் 16.12.2014 முதல் (சிம்ம ராசியினர்):தினமும் ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபட வேண்டும்;அவரது சன்னதியில் நின்று கொண்டு ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை சுமாராக பத்து நிமிடம் வரை ஜபிக்க வேண்டும்;அர்த்தாஷ்டமச்சனியின் தாக்கம் தீர,வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு வெள்ளைத் தாமரை மாலை அணிவிக்க வேண்டும்;புனுகு பூச வேண்டும்;வெள்ளைப் பூசணி கலந்த சாம்பார் கலந்த சாதத்தைப் படையலாக வைத்து,நமது பெயருக்கும்,நமது குடும்பத்தார் பெயருக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும்.பிறகு,அந்த படையலை அங்கே வந்திருப்பவர்களுக்கு பகிர்ந்து தர வேண்டும்.நாமும் சாப்பிடலாம்;ஓவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு காலத்தில் ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் அல்லது கலந்து கொள்ள வேண்டும்.சந்தனாதித்தைலம்,ஜவ்வாது,புனுகு,அத்தர்,செவ்வரளி போன்றவைகளை அபிஷேகத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.அபிஷேகம் நடைபெறும் நேரத்தில் ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை மனதுக்குள் ஜபிக்க வேண்டும்.
பொதுக் கருத்துக்கள்;பழமையான சிவாலயங்களில் இருக்கும் ஸ்ரீகால பைரவப் பெருமானத்தான் வழிபட வேண்டும் என்று இல்லை;பல அம்மன் கோவில்களிலும்,குல தெய்வக் கோவில்களும் இருக்கும் ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபடலாம்;தமிழ்நாட்டில் இன்னும் ஏராளமான ஆலயங்களில் ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு தேய்பிறை அஷ்டமி பூஜைகள்,அபிஷேகங்கள் துவக்கப்படவில்லை;எனவே,உங்கள் ஊரிலும் அப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கலாம்;நீங்கள் அதை மாற்றி ஸ்ரீகால பைரவப் பெருமானின் அருளைப் பெறுங்கள்;இந்த வழிபாடுகள் செய்பவர்கள் நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதைக் கைவிட வேண்டும்;
அப்படிக் கைவிட்டப் பின்னரே,இந்த வழிபாட்டைத் துவங்கிட வேண்டும்.நாம் ஸ்ரீகால பைரவப் பெருமானை தொடர்ந்து வழிபட,வழிபட நமது குலதெய்வத்தின் சக்தி அதிகரிக்கும்;
நமது கர்மவினைகள் கரையத் துவங்கும்;இதன் மூலமாக நிம்மதியாகவும்,செல்வச் செழிப்புடனும்,நாம் விரும்பும் லட்சியத்தை அடையவும் முடியும்.
தொலைதூர மாநிலங்கள்,நாடுகளில் இருப்பவர்கள் அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை எழுதி வந்தாலே போதும்.நடக்க முடியாதவர்கள்,கோவிலுக்குச் செல்ல முடியாத சூழலில் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும்.இவைகளைப் பின்பற்றிக் கொண்டே,
உங்கள் ஊருக்கு அருகில் அமைந்திருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு காலத்தில் வழிபாடு செய்வதன் மூலமாக,அடுத்த தேய்பிறை அஷ்டமி வரையிலும் பணம் சார்ந்த பிரச்னைகள் குறையும்;தொல்லைகள் இராது;
அவ்வாறு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் அருகில் இல்லாவிடில்,ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபடலாம்;
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
நன்றி ஆன்மீக கடல்